கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் பூட்டை உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் உஷா எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் கடன் தொல்லையால் மிகவும் மன உளைச்சலில் இருந்தோம். எங்கள் ஊரில் உள்ள 7 குடும்பத்தினர் வேண்டுமென்றே ஒரு வழக்கில் எங்களை சிக்க வைத்தனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது 9 வயது மகள் மற்றும் 13 வயது மகனுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.