கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருவதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இன்று கோவிலில் களப பூஜை, களபம் சார்த்தல் மற்றும் களபம் அபிஷேகம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சில பக்தர்களுக்கு 18 படிகள் ஏறும் போது மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பக்தர்களுக்காக ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியரும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வருவதோடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 3 மணி மற்றும் மாலை 3 மணியில் நடை திறக்கப்படும். மேலும் கூடுதல் தரிசன நேரம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றால் ஐயப்பன் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.