நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கொடூர முறையில் தாக்கி இருக்கின்றனர்.
இதில் ஒருவர் மட்டுமே நாயை அடித்து கொலை செய்துள்ளார். எனினும் உடன் இருந்தவர்கள் நாயை அடிக்க ஊக்குவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 4 பேரும் ஓக்லாவிலுள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் ஆவர். அந்த கர்ப்பிணி நாய் மாணவர்களை பார்த்து குரைத்ததால் அவர்கள் எரிச்சல் அடைந்து கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொன்ற சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.