டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 மற்றும் 21 என பல்வேறு தேதிகளில் பதிவானதும் தெரிய வந்தது.
இது குறித்து பாஜக கடுமையான கேள்விகளை முன் வைத்து வருகிறது. ஆனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சத்யேந்தர் ஜெயின் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில் திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் உடல் சிகிச்சை நிபுணர் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பாலியல் குற்றவாளி என தகவல் தெரிவிக்கின்றனர். அவர் பெயர் ரிங்கு, ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் 376, 506, 509 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.