கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும், எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ-வை பார்த்த கிராம மக்கள் ஆத்திரத்தில் கல் மற்றும் கட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளனர். அதோடு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் எம்எல்ஏ-வின் சட்டையை கிழித்து அடித்து உதைத்துள்ளனர்.
அதாவது புகார் கொடுக்கும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு பெண்ணின் உயிர் பரிதாபமாக போயிருக்குமா என்று கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் ஆவேசமாக கேள்வி எழுப்பி தர்மடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து வந்து எம்எல்ஏ-வை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். மேலும் பாஜக எம்எல்ஏ-வை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.