தமிழ்நாடு அணி 506 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த நிலையில், நாராயண் ஜெகதீசனும் தொடர்ந்து 5 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்..
இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் முடிவில்லை. இதனால் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேச அணிகள் மோதியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலப் பிரதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அருணாச்சலப் பிரதேச அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் கடந்து விளாசினர். அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டியது. பவுலர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் கடைசியில் 400 ரன்களையும் தாண்டியது.
பின் ஒருவழியாக 38.3 வது ஓவரில் 416 ரன் இருந்த போது தான் ஒரு விக்கெட்டை எடுத்தது அருணாச்சலப்பிரதேசம். சாய் சுதர்சன் 102 பந்துகளில் (19 பவுண்டரி, 2 சிக்ஸர்) 154 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் 200 ரன்களை கடந்து விளாசிய ஜெகதீசன் அவுட் ஆனார். அவர் முச்சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 141 பந்துகளில் (15 சிக்ஸர், 25 பவுண்டரி ) 277 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 406 ரன்கள் குவித்தது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆக அமைந்தது..
அதன்பின் வந்த பாபா அபராஜித், பாபா இந்திரஜித் (அண்ணன், தம்பி) இருவரும் தலா 31 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 506 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய அருணாச்சல பிரதேச அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்க பிடிக்க முடியாமல் 28.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 71 க்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 435 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் சார்பில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் தமிழ்நாடு அணி 506 ரன்கள் குவித்து வரலாறு சாதனை படைத்துள்ளது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுவே அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 498/6 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது. தற்போது அதனை தமிழ்நாடு அணி முறியடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் சர்ரே கவுண்டி கிரிக்கெட் அணி 481 ரன்கள் குவித்துள்ளது.
ஏற்கனவே இந்த தொடரில் தொடர்ந்து 4 சதங்களை விளாசிய தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் இந்த போட்டியிலும் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் 5 சதம் தொடர்ச்சியாக அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் யாரும் தொடர்ந்து 5 சதங்களை அடித்ததில்லை.
முன்னதாக இலங்கை அணியை சேர்ந்த குமார் சங்கக்கரா, தென்னாபிரிக்க அணியை சேர்ந்த அல்விரோ பீட்டர்சன், இந்திய அணியை சேர்ந்த தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடர்ந்து 4 சதங்களை அடித்த நிலையில், தற்போது 5 சதங்களை பதிவு செய்து ஜெகதீசன் சாதனை படைத்துள்ளார்.
இதற்குமுன் 2002ஆம் ஆண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலிஸ்டர் பிரவுன் 268 ரன்கள் அடித்ததே அதிக ரன்களாக இருந்தது. இதே போல ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்திருந்தார். இந்தநிலையில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் ஜெகதீசன் 277 ரன்கள் அடித்து முறியடித்துள்ளார். சமீபத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜெகதீசனை விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.