திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணத்தையடுத்து முக ஸ்டாலின் கண்ணீருடன் இரங்கல் எழுதியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.
திமுக உறுப்பினர்களை அதிர்ச்சியடைய வைத்த இந்த மரணம் திமுக தலைவர் முக.ஸ்டாலினை கண்ணீர் வடிக்க வைத்தது. அவர் தனது கைப்பட இரங்கல் செய்தி குறிப்பு எழுதியுள்ளது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்டாலின் கைப்பட எழுதிய இரங்கல் மடல் :
திராவிடச் சிகரம் சரிந்துவிட்டது .
இனமான இமயம் உடைந்துவிட்டது .
எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார் !
என்ன சொல்லித் தேற்றுவது ?
எம் கோடிக்கணக்கான கழக குடும்பத்தினரை ?
பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்.!
முத்தமிழ் கலைஞரை தாங்கும் நிலம் ஆக இருந்தவர்.!
எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்.!
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வேன் ?
தலைவர் கலைஞர் அவர்களே என்னை வளர்த்தார்.!
பேராசிரியர் பெருந்தகை என்னை வார்ப்பித்தார்.!
எனக்கு உயிரும் , உணர்வும் , தந்தவர் கலைஞர் .
எனக்கு ஊக்கமும் , உற்சாகமும் , ஊட்டியவர் பேராசிரியர்.
எனக்கு எனக்கு அக்காள் உண்டு , அண்ணன் இல்லை
பேராசிரியர் தான் என் அண்ணன் என்றார் தலைவர் கலைஞர்.!
எனக்கு அத்தை உண்டு , பெரியப்பா இல்லை.
பேராசிரியப் பெருந்தகையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன்.
அப்பாவை விட பெரிய அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம்.
ஆனால் நானோ, பேராசிரியர் பெரியப்பாவால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில்,
”கலைஞருக்கு பின்னால் தம்பி ஸ்டாலின் தலைவர்” என்று அறிவித்தார்.
எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன்
மறைந்தது என் இதயத்தை பிசைகிறது.!
அப்பா மறைந்தபோது,
பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.
இன்று பெரியப்பாவும் மறையும் போது
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வேன் ?
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ?
இனி யாரிடம் பாராட்டு பெறுவேன் ?
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வேன் ?
பேராசிரியப் பெருந்தகையே.!
நீங்கள் ஊட்டிய
இனப் பால் – மொழி பால் – கழகப் பால்
இம் முப்பால் இருக்கிறது.
அப்பால் வேறு என்ன வேண்டும் ?!
உங்கள் அறிவொளியில் எனக்கு பயணம் தொடரும்
பேராசிரியப் பெருந்தகையே..!!
கண்ணீருடன் : முக. ஸ்டாலின்
என்று முக.ஸ்டாலின் தனது கைப்பட எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.