பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டில் உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது. அதற்கு தகுதி இல்லாத வெளி மாநில மாணவர்களை தொலைதூர கல்வியில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியினர் அப்போது பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இயக்கத்தின் இயக்குனராக இருந்த குணசேகரன், துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அறிக்கையில் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல் ராமன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ராமன் மாத இறுதியில் ஓய்வு பெற இருந்ததால் அவருக்கு ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.