திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு செயலாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்கியதோடு, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 69-வது கூட்டுறவு வார விழா அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பயிர் கடன் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தேங்காய்க்கு விலை இல்லாத காரணத்தால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படுமா என்று பலரும் கேட்கிறீர்கள். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் கடலை எண்ணெய் தான் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அமைச்சர் பிடிஆர் கூட்டுறவு கடைகள் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறியது முற்றிலும் தவறானது ஆகும். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கிறது. இந்த பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். நாகை முதல் கோவை வரை உள்ள 7 மீட்டர் தேசிய நெடுஞ்சாலையானது தற்போது 10 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் முதல் சிந்தாமணி புதூர் வரை மத்திய அரசு பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்று கூறியது. இந்த சாலை அமைப்பதற்கான சூழல் தற்போது இல்லையென்றாலும் மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்தியுள்ளோம். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவான அளவில் தான் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலும் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.