வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த குடும்பத்தினர் வீட்டின் மற்றொரு அறை இடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வேறு ஒரு அறையில் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் சுவர் இடிந்து மாட்டு கொட்டகை சேதம் அடைந்தது. பின்னர் வீடு இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் குடும்பத்தினர் காலை வரை வெளியே அமர்ந்திருந்தனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.