வியாபாரியிடம் 9.38 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோகன் குமார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்க முடிவு செய்தார். இந்நிலையில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக மோகன் குமார் அந்த நிறுவனத்திற்கு 7,79,625 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் 20 டன் சர்க்கரையை மட்டும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மோகன்குமார் கேட்டதற்கு மீதமுள்ள 5 டன் சர்க்கரையுடன் சேர்த்து 30 டன் சர்க்கரை அனுப்புவதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி மோகன் குமார் 9,38,230 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சர்க்கரையை அனுப்பி வைக்காமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தனர். இதுகுறித்து மோகன் குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.