தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் திருச்சி பகுதி மற்றும் ராஜஸ்தானில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. அவை தவறான செய்திகள். ரபி பருவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்புகிறது.
மேலும் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையான விநியோகத்தை உறுதி செய்வது அந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும். தற்போதைய காலகட்டத்தில் யூரியா விற்பனை 38.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 54.11 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்கள் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக யூரியா உற்பத்தி நிலையங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் யூரியா தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளன. மேலும் ரவி பருவ தேவைக்கான எம்ஓபி, என்பிகேஎஸ் மற்றும் எஸ்எஸ்பி உரங்களும் தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.