தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான வேட்டி 5 டிசைன்களிலும் பெண்களுக்கான சேலை 15 புதிய டிசைன்களிலும் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.