Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை வழக்கு – உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனையை வீடியோவாக பதிய உத்தரவு!

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவாகச் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் இந்த வன்முறை வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் சித்தார்த் மிருதுள், ஐஎஸ் மேத்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடந்தது. அதில் டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை வீடியோ பதிவாகச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் வன்முறையில் பலியானோர் அனைவரது டி.என்.ஏ. மாதிரிகளைப் பராமரிக்கவும், அடுத்த புதன் கிழமை வரை அடையாளம் தெரியாத எந்த உடலையும் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அதே போல் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவது பற்றியும் டெல்லி போலீஸ், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களின் பெயர், எண்கள் அடங்கிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை புதன் கிழமை நடைபெற இருக்கிறது.

Categories

Tech |