5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டியகவுண்டனூர் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தனர். நேற்று மாலை மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை வடிவுக்கரசி தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 5 மாடுகளும் சுருண்டு விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவுக்கரசி உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி வடமதுரை கால்நடை உதவு டாக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
ஆனால் அடுத்தடுத்து 5 மாடுகளும் பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து கால்நடை டாக்டர் பரிசோதனை செய்தபோது மாடுகள் குடித்த தீவன நீரில் யூரியா கலந்திருப்பது தெரியவந்தது. ஆனால் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் சாவிற்கான உண்மை காரணம் தெரியவரும் என டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவனத்தில் தவறுதலாக யூரியா கலந்ததால் மாடுகள் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.