தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சந்திரமுகி படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யா, அஜித், விக்ரம் மற்றும் தனுஷ் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
சினிமாவில் நயன்தாரா கொடிகட்டி பறந்தாலும் சிம்புவுடன் காதல் மற்றும் நடிகர் பிரபுதேவாவுடன் காதல் போன்ற பல சர்ச்சைகளிலும் சிக்கினார். குறிப்பாக சர்ச்சைகளில் கதாநாயகிகள் சிக்கினால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் என்பது வராது. ஆனால் தன் மீது எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபிடியாக்கி தற்போது வரை முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் நயன் நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையும் நயன்தாரைவை சேரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கலக்கி வந்த நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகினார்.
கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சர்ச்சைகளை எல்லாம் தவிடுபிடியாக்கி, தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவின் தைரிய லட்சுமி நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.