ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் என தான் மேற்கொண்ட சபதத்தையும் அவர் நினைவு கூர்ந்து உள்ளார். 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆளும் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் தனது மனைவியை சட்டப்பேரவையில் அவமதித்ததாக குற்றம் சாட்டி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் ஆந்திர சட்டசபைக்குள் நுழைவேன் என சபதம் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்தால் சரியான முறையில் பணிகளை செய்து மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என கூறியவர் தனக்கு வயதாகிவிட்டது என சிலர் கேலி செய்கிறார்கள் எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.