திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டையில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ பிரேம்குமார், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், தனி தாசில்தார் நிர்மலா கிரேஸ், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 401 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த முகாமில் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணவரை இழந்த சண்முகப்பிரியா(27) என்பவர் கலந்து கொண்டு மனு கொடுத்துள்ளார். அப்போது இதுவரை 50-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற்ற எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இரண்டு மகளுடன் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.