திரைப்பட பாணியில் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி சாலையில் பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நீலகிரியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்தனர். சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் உதவி ஆய்வாளர் சீருடையை அணிந்து கொண்டு பொது மக்களிடம் பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.