சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமை பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை ஆகும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டாக்டர் பிரகாஷ் கூறியுள்ளார். இது பற்றி பிரகாஷ் பேசும்போது, எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ தொற்றினால் பாதிக்கப்பட்டு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ் ஐ தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிப்பு என்பது ஐந்து நாட்களில் குணமாக கூடிய ஒன்றுதான். ஆனால் அதே சமயம் அதை கவனிக்காமல் விட்டால் பார்வையை பறிபோக நேரிடும் என தெரிவித்துள்ளார்.