காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டுள்ளார். அதன் பின் முதல் தகவல் அறிக்கை, புகார் அளிக்க வந்தவர்களின் விவரங்கள் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் பேசும்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுவாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஏராளமான புகார் மனுக்கள் வரும். அப்படி வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை தெரிவிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் பெட்டியில் அவர்களது பிரச்சனை பற்றி மனு போட்டால் அதை நான் நேரில் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பேன். அதனால் புகார் பெட்டியை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.