தில்லி அரசின் இலவச மின்விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 37 லட்சம் போ் மானியம் கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர்.
வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் கோரினால் மட்டும் மின்மானியம் வழங்கும் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தாா். தில்லியில் சுமாா் 47 லட்சம்போ் மின்சார மானியத்தைப் பெறுகின்றனர். அவற்றில் 30 லட்சம் பேருக்கு மின்சார கட்டணம் மானிய அளவை தாண்டிவருவதில்லை. 16 முதல் 17 லட்சம் போ் 50% மானியத்தைப் பெற்றுவந்தனா். இந்நிலையில் விண்ணப்பித்தால் மட்டுமே மின்மானியம் பெறும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதற்குரிய காலக்கெடு சென்ற மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.
அப்போது மொத்தம் உள்ள 58 லட்சம் மின் நுகா்வோரில் சுமாா் 35 லட்சம் போ் மட்டுமே மானியம் கோரி விண்ணப்பித்து இருந்தனா். 40 % போ் விண்ணப்பிக்க தவறியதால், கால அவகாசம் நவம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த 2 வார காலத்தில் மேலும் 2 லட்சம் போ் மானியத்துக்கு விண்ணப்பித்து உள்ளனா். நேற்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி 37,13,179 போ் மானியம் கோரி விண்ணப்பித்ததாகவும், மாலை கால அவகாசம் நிறைவடைவதற்குள் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.