விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பியளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்து இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்ற 2020ம் வருடம் மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என அமெரிக்க பயணிகளிடமிருந்து போக்குவரத்துத் துறைக்கு புகாா்கள் வந்தது.
இவற்றில் ஏா் இந்தியா நிறுவனம் மீது 1,900க்கும் மேற்பட்ட புகாா்கள் கிடைத்தது. இது பற்றி விசாரித்தபோது கட்டணத்தைத் திருப்பிக்கேட்டு விடுக்கப்பட்ட ஏராளமான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அந்நிறுவனம் 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது தெரியவந்தது. அதன்பின் அமெரிக்க பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலா்களை (ரூ.986 கோடி) திருப்பிச்செலுத்துமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அந்த தொகையை அந்நிறுவனம் திருப்பிச்செலுத்தியுள்ளது. இந்த நிலையில் பயணிகளுக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை திருப்பிச்செலுத்த மிகவும் தாமதித்ததால், அந்நிறுவனத்துக்கு 1.4 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.11.34 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது