புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு 20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி என்ற இளைஞன் பெரியமார்க்கெட் பகுதியில் பூக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.
கோபி உறவினர் என்ற முறையில் ஆனந்தியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மலர்ந்தது. இதனால் இருவரும் மிக தீவிரமாக காதலித்து வந்ததுடன், தனிமையிலும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும், வீட்டில் ஆனந்தியின் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசையாக பேசி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளான் கோபி.
இந்நிலையில், ஆனந்தி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள் என்று கூறி ஆனந்தி அடிக்கடி வற்புறுத்தி கொண்டே இருந்துள்ளார். ஆனால் கோபி என் அண்ணனுக்கு திருமணம் நடந்து முடிந்தபின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தட்டி கழித்து வந்துள்ளான்.
இதன் பின்னர், திருமணத்திற்கு முன்னதாகவே தனக்கு குழந்தை பிறந்தால் அனைவருக்கும் தெரிந்து அவமான பட வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதி கோபியின் இல்லத்திற்கு ஆனந்தி சென்று அவனிடம் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது கோபியின் குடும்பத்தினர் ஆனந்தியை கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து ஆனந்தி அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.