ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும், அது அமலுக்கு இன்னும் வரவில்லை எனவும், ஆகபோகக்கூடிய தேதி இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் இந்த வழக்கை தொடர எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, அது அமலில் உள்ள சட்டமாக தான் கருத வேண்டும் என்றும், அவசர சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவசர சட்டம் காலாவதி ஆகும் எனவும் குறிப்பிட்டனர். அவசர சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டுவதால் அது அமலுக்கு வரும் தேதி அறிவித்த சில நாட்கள் வரை நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த வழக்கு தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டனர். மனுதாரர்கள் தரப்பில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அவசர சட்டம் அமலுக்கு வரும்போது புதிதாக வழக்கு தொடர அனுமதி அளித்தனர். மேலும் இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.