கொரோனா குறித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களை அணுகுமாறு பொதுமக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகங்களுக்கு சென்று ஊசி போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல பெருந்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு மற்றும் ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் இந்நோய் நேரடியாகப் பரவுகிறது. மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களைத் தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது என தெரிவித்தார்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோய்க்காக அனைத்து வசதிகளையும் கொண்ட தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.