சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான ஒரு சம்பவம். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மாணவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவும் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி ஆர்த்தோஸ்கோபி எனப்படும் சிகிச்சையை மாணவி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டத்தில் மாணவிக்கு இரத்த ஓட்டம் நிற்கவே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நானும் அந்த துறையின் செயலாளரும் மாணவியை நேரில் சந்தித்து பார்த்ததோடு குணமடைந்து வந்ததும் பெங்களூருவில் இருந்து பேட்டரி கால்கள் வாங்கித் தருவதோடு முதல்வரிடம் கூறி அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்றும் மாணவியின் பெற்றோரிடம் உறுதி அளித்திருந்தோம். மாணவியின் மரணம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தியதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது தெரிய வந்ததால் அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளோம். ஆனால் அந்த மருத்துவர்கள் இதற்கு முன்பாக செய்த சிகிச்சைகள் எதுவும் தவறாக முடிந்ததில்லை.
இந்த சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்கி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம். அரசு மருத்துவமனைக்கு தினசரி 6 லட்சம் புற நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 60,000 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நல்லபடியாக குணமாகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். 1513 வகையிலான காப்பீட்டு திட்டங்கள் இருக்கும் நிலையில், தேவைப்பட்டால் மேலும் சில நோய்களை கூட காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் விளையாட்டு மட்டுமின்றி வேறு எந்த வகையில் இருந்தாலும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.