Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்லா பந்து வீசுனாங்க….. ஆனா 20 ரன்கள் குறைவு…. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது இதுதான்..!!

20 ரன்கள் குறைவு, ஆனாலும் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று கோப்பையை வெல்வது யார் என்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான  இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். சாம்பியன் ஆவதற்கு அவர்கள் தகுதியானவர்கள், நன்றாக போராடினார்கள். ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தார்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி. முதல் 2 போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தோம். ஆனால் கடைசி 4 ஆட்டங்களில் நாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்பது நம்ப முடியாத ஒன்று என்றார்..

மேலும் எங்களது வீரர்களிடம் இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னேன். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனால் எங்களது பந்துவீச்சாளர்கள் நன்றாக போராடினார்கள், உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாக எங்களது பந்துவீச்சு இருந்தது. ஷாஹின் அப்ரீடியின் காயம் துரதிஷ்டவசமாக எங்களை தள்ளி போட்டு விட்டது. இருப்பினும் அது விளையாட்டின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.

Categories

Tech |