கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். அதன்பின் கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் மாணவியின் பெற்றோர் ஒப்படைக்கவில்லை, கடந்த 26ஆம் தேதி வரை அந்த செல்போனை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிக்கையை தங்களுக்கு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் ரகசியமானது என்பதால் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கையை அவர்களுக்கு வழங்க கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் செல்போன் விவகாரம் தொடர்பாக பதில் அளித்த மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்று இல்லை எனவும், அதை ஒப்படைப்பது பற்றி விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என கூறினார். மேலும் ஒரு கூராய்வு என்பது முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதியை பொருத்தவரை உடற் கூராய்வு என்பது அந்த மாணவி எப்படி இறந்தார் என்பது மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மாணவியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என தெரிவித்ததுடன் நியாயமான விசாரணை கேட்கும் நீங்கள் மாணவியுடைய செல்போனை ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மாணவி செல்போனை ஒப்படைக்க நீதிபதி பெற்றோர் தரப்பிற்கு உத்தரவிட்டார். அந்த செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கையில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.