தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் இணைகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி நடிகர் அர்ஜூன், பிரித்திவிராஜ், கௌதம் மேனன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினர்.
இதனையடுத்து நடிகர் விஷால், நடிகர் நிவின்பாலி மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக லோகேஷ் 30 நாட்கள் கால்ஷீட் மிஷ்கினிடம் கேட்டுள்ளார். ஆனால் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் தான் இயக்கும் படங்களின் வேலை பாதிக்கப்படும் என்பதால் படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.