அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ் மொழி வரலாற்று சிறப்பு வாய்ந்த மொழி. அதனால் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொருளியல் படிப்புகள் தொடங்கும் திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். இந்நிலையில் இந்திய ஆட்சி பணி தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக 1997-முதல் 2001- வரை தமிழில் இலக்கிய வரலாறு, புவியியல் வரலாறு போன்ற பாடத்திட்டங்கள் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு முதல் முயற்சியாக தமிழ் மொழி வரலாறு வெளியிடப்பட்டது.
மேலும் 10-ஆம் வகுப்பு வரை அனைவரும் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என திமுக கட்சி தான் கூறியது. மேலும் கல்லூரிகளில் தமிழ் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பு முதல் முதலில் தமிழ்நாட்டில் மு.கருணாநிதி அவர்கள் 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பை தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட மற்றும் இயந்திர பொறியியல் படிப்புகளை தமிழில் அறிமுகம் செய்து திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் தமிழ் பொறியியல் படிப்பு நடைமுறையில் தான் உள்ளது இன்று வரை. இந்நிலையில் தமிழ் பொரியியல் கல்வி படித்து பி.இ. பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்கு பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், மெட்ரோ ரயில் திட்டம், புறநகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளராகவும், பல வெளிநாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் உள்ளனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்ற மாணவி 2020-ஆம் ஆண்டு குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து இந்த ஆண்டு அடுத்த கட்டமாக முதல் பட்டய படிப்புகளும் தமிழ் வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ் வழியில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் பட்டப்படிப்பில் சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி கணினி அறிவியல் பிரிவும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு தமிழில் கற்பிக்கும் வழி செய்ய தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 3 பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.