இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, முருகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த 31 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பேரறிவாளினை விடுதலை செய்தது. இதனையடுத்து நளினியும் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று தங்களையும் விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது நளினி உட்பட 6 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் நகல் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது.
அதன் பிறகு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விடுதலைக்கான அனைத்து விதமான விதிமுறைகளும் முடிவடைந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். இதேபோன்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்த முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைக்குப் பிறகு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் புழல் சிறையில் இருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை பேரறிவாளன் வரவேற்றார்.