ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த மீட்புப் பணியைச் சேர்ந்த ஊழியர்கள் உடனே மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, குரங்கைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு கம்பை வைத்து மீட்க முயன்றும், அவ்வளவு எளிதில் குரங்கை மீட்க முடியவில்லை. ஆம், குறுக்கும் நெடுக்குமாக நிறைய மின்வயர்கள் இருந்ததால் குரங்கை மீட்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே இதனைக் கண்ட அதன் நண்பனான மற்றொரு குரங்கு விரைந்து சென்று மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கைக் காப்பாற்றி பத்திரமாக தன்னுடன் அழைத்துச் சென்றது. பின்னர் அந்த குரங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்தக் குரங்கைக் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியது. இந்த சம்பவத்தை பார்த்து அங்கு சுற்றி இருந்த மக்கள் வியந்து போய் விட்டனர். இந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்கு இருந்த பல குரங்குகள் இதனை பார்த்து கொண்டிருந்தது. உண்மையான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் இந்த குரங்குதான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.