திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மோகனின் பெற்றோருக்கு 5 லட்சத்து 58 ஆயிரத்து 367 ரூபாய் இழப்பீடாக வழங்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்காக நின்ற அரசு பேருந்தை ஜப்தி செய்தனர்.