கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தால் தொழிலாளர்களை தேயிலை தோட்டத்திற்கு அனுப்ப கூடாது எனவும், நள்ளிரவு நேரத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் அதிகளவிலான பொருட்களை இருப்பில் வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.