Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் என்ற அடிப்படையில் நேற்று மதியம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று உத்தரவை அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் சுமார் 12 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கும், வேலூர் பெண்கள் சிறைக்கும் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் நளினி விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நளினி தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டியும், தாயார் உடல் நிலையை காரணம் காட்டியும் கவனித்துக் கொள்வதற்காக தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளினிக்கு பரோல் வழங்கியது. ஏற்கனவே நளினிக்கு அவருடைய அப்பாவின் இறப்பு தொடர்பாகவும், அவருடைய மகளின் திருமண ஏற்பாடு தொடர்பாகவும்  பரோல் வழங்கிய நிலையில் 3ஆவது முறையாக பரோல் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 10 மாதங்களாக பிரம்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயார் பத்மாவுடன் தங்கி இருந்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு காட்பாடியில் உள்ள பிரம்மபுரம் வீட்டில் இருந்து நேரடியாக வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு சென்று தனக்கு விடுதலை கிடைத்து விட்டதால் தன்னுடைய பரோலை ரத்து செய்து கொள்கிறேன் என நளினி சிறை துறையிடம் நகலை வழங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து நளினி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நளினியை தொடர்ந்து முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார்.

விடுதலையான நளினி அருகில் இருக்கக்கூடிய ஆண்கள் மத்திய சிறையில் அவருடைய கணவரான முருகனுடன் சேர்ந்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முருகன், சாந்தன் ஆகிய இருவரும் திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அரசின் நடைமுறை பின்பற்றப்பட்ட பிறகு அவர்கள் இலங்கை செல்வார்கள் என தெரிகிறது.

 

Categories

Tech |