திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா குமாரி சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 1998-ம் ஆண்டு மாநில அளவில் சாதி சான்றிதழை சரிபார்க்கும் படி உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு தான் மாநில அளவிலான குழு சாதி சான்றிதழை சரிபார்த்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதிச் சான்றிதழ் சரிதான் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் லலிதா குமாரிக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகள் மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும் என நீதிபதிகள் எல்ஐசி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
அதன் பிறகு சாதி சான்றிதழை சரி பார்ப்பதற்கு 20 வருடங்கள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான குழு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் ஜாதி சான்றிதழை சரிபார்க்கும் குழுவில் இருப்பவர்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வு வழங்கப்படாதது தான் கால தாமதத்திற்கு காரணம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் ஜாதி சான்றிதழை சரி பார்ப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.