கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பரசேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜீப் ஓட்டுனராக வேலை பார்க்கும் அஜித்குமாருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணி ஒதுக்க வலியுறுத்தி அஜித்குமார் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அஜித்குமார் தனது மனைவி பினு, மகன் அபிஜித், மகள் பிவிஷ்மா ஆகியோருடன் போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் கூறியதாவது, நான் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்தேன். ஆனால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால் என்னால் பேருந்து ஓட்ட இயலவில்லை. இதனால் ஜீப் ஓட்டும் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் 10 நாட்களாக எனக்கு பணி ஒதுக்காதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்காக அஜித்குமாரையும் அவரது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்தனர்.