ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் 6 1/2லட்சம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் முதலீடு செய்து இருக்கின்றார். சில மணி நேரத்தில் அவருக்கு 1200 கிடைத்தது. இதன்பின் அந்நிறுவனத்தில் இருந்து பேசிய நபர் எங்கள் நிறுவனத்தில் அதிக தொகை முதலீடு செய்தால் ஓரிரு நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதை நம்பி பிரவீன் குமார் பல தவணைகளில் 6 லட்சத்து 59 ஆயிரத்தை செலுத்தி இருக்கின்றார். உடனே அந்நிறுவனத்தில் இருந்த பேசிய நபர் ஓரிரு நாட்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு ஏழரை லட்சத்திற்கும் மேல் பணம் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் மூன்று நாட்களாகியும் பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் குமார் தன்னிடம் பேசிய எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.