தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாளை முதல் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சற்று முன் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.