தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பேரிடர் சமயத்தில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.