Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா… பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை!

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவின் கேரளாவில் 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 28 நபர்களின் விபரம் :

இத்தாலியிலிருந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகருக்கு வந்த சுற்றுலா பயணிகள் 21 பேரில் 16 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுதலாக இருந்த ஓட்டுநருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பிய 45 வயதான நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியிருக்கிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த மென் பொறியாளர் ஒருவருக்கு பரவியுள்ளது, 24 வயதான இவர் துபாயில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து ஹைதராபாத் வந்தார்.

ஆக்ராவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர், டெல்லியை சேர்ந்த நபர் மூலமாக இந்த குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பரவிய பின், அந்த குடும்பத்தினருக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக இன்று காலை 11 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரிகிறது. மேலும் மாநில அரசுகளுக்கு அறிவுரைகளை வழங்கியது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இருமல், தும்மல் உள்ள மாணவர்களை கைக்குட்டை, டிஷ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும். முழு நீள கைசட்டையை அணிய வேண்டும். தொற்றுக்கள் பரவாமல் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான அறிவுரைகளை சொல்லி கொடுக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Categories

Tech |