சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், கிட்டத்தட்ட 34 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினரான இருந்தேன். பலபேருக்கு அது தெரியாது. ஏனென்றால் நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். அப்படி அமைதியாக இருந்த காரணத்தினாலே பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. ஆனால் என்னுடைய தொகுதி எந்த மூலையிலே, எந்த கிராமத்திலே, எந்த குறுக்குத் தெருவிலே போய் கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அத்தனை பேரும் சொல்வார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டாலே, அடுத்த தேர்தல் வருகின்ற போது மக்களை சந்திக்கின்ற பொழுது ஏராளமான பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் 1௦-வது முறை ஒருவர் நின்று வெற்றி பெற்றார் என்று சொன்னால், எந்த அளவிற்கு என்னுடைய உழைப்பு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் எனக்கும் வெகு தூரம். நான் திரை அரங்கிற்கு சென்று சினிமா பார்த்து 25 வருடம் ஆகிறது. தொலைக்காட்சியில் நான் நிறைய திரைப்படத்தை பார்த்திருக்கின்றேன். எனவே திரைப்படத்தில் யார் நடிக்கிற நடிகைகள் என்று தெரியாது. தொலைக்காட்சியிலே பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய மகன்கள், மனைவி… இவர் ”இன்னாரென்று” சொல்வார்கள். எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் ? அரசியலிலும், திரைப்படமும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கிறது.