இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8- ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதோடு இந்த முறை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக் கூடியதாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.
மேலும் தேர்தலில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 22 எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ.கவுக்கு 45 எம்.எல்.ஏ-க்கள், சி.பி.எம்- க்கு 1 எம்.எல்.ஏ இருக்கின்றனர். இந்நிலையில் பஞ்சாபில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றியை பெற்றது. அதன் பிறகு பிற மாநிலங்களிலும் வெற்றி பெற முயற்சி செய்கிறது. தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் ஆட்சியைப் பிடிப்பதில் பா.ஜ.க-வுக்கும், காங்கிரசுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.