ஒடிசாவில் யானைகள் சாராயம் குடித்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் கிராமத்திற்கு அருகே உள்ள முந்திரி காட்டு பகுதியில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். பின்னர் அந்த தண்ணீரில் இலுப்பை பூக்களை போட்டு ஊற வைத்தனர். இதனை அடுத்து மறுநாள் காலை கிராமத்தினர் அதிலிருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக முந்திரி காட்டு பகுதிக்கு சென்றனர்.
அப்போது பானைகள் எல்லாம் உடைந்து அதன் அருகில் 24 யானைகள் கொண்ட கூட்டம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் யானைகளை எழுப்புவதற்கு கிராம மக்கள் பல்வேறு முயற்சி செய்தும் அவை பலனளிக்காமல் போனது. உடனடியாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பெரிய மேளங்கள் அடித்து சப்தம் எழுப்பி யானைகளை அங்கிருந்து விரட்டி விட்டனர்.