கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மதினாபேகம், பால்ராஜ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் இணைந்து கோவை ராம் நகரில் வசிக்கும் அமுதன் என்பவருக்கு காரை விற்பனை செய்ததும், அவர் அபுதாகிர் என்பவருக்கு காரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வாடகை காரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதினா பேகம், பால்ராஜ், அமுதன், அபுதாஹிர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.