Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை வழக்கை ஒத்திவைத்தது தவறு… வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி வன்முறை வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமாற்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

கடந்த வாரம் இந்த வழக்கு நீதிபதி முரளிதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிய உத்தரவிட்டார். ஆனால் மறுநாளே நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாத அவகாசம் கொடுத்து, வழக்கை டெல்லி தலைமை நீதிபதி டிஎன் பட்டேல், சி ஹரிசங்கர் அமர்வு ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனை எதிர்த்து ஹர்ஷ் மாந்தர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த மனுவில் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாஜக தலைவர்களின் பேச்சுதான் வன்முறையை தூண்டியது என கூறப்பட்டது. துப்பாக்கியால் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என்று கபில் மிஸ்ரா பேசிய மறுநாளே கலவரம் வெடித்தது என கூறி அதற்கான வீடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஏப்ரல் மாதம் வரை டெல்லி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது தவறானது, உடனே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சூழ்நிலையை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைத்ததை ஏற்றுக்கொள் முடியாது. வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் கூட குறைந்தது வழக்கை விசாரிக்கவாவது வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |