வேலூர் மாவட்டம் பாகாயத்தில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்தும், தண்டால் எடுக்க சொல்லியும், கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் சொல்லியும் பலவாறு துன்பப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், டெல்லியில் உள்ள ராகிங் தடுப்பு அமைப்புக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் சீனியர் மாணவர்களால் நாங்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துள்ளதால் அவர்கள் மீது தக்க முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரின் படி ராகிங் செய்த 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.