ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது “இந்த ஆண்டில் மட்டும் இது எங்களுடைய ஐந்தாவது சந்திப்பு ஆகும். எங்களுடைய சந்திப்பு ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்சனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள் என அனைத்தும் உலகப் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தான் இப்போது பெரிதாக இருக்கின்றது. இந்த போரை பொறுத்தவரையில் இரு நாடுகளும் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்பதை இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார்.