தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், உணவு சமைப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்க தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும் எனவும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஓட்டலில் தரமான சுகாதாரமான பாதுகாப்பான உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டுள்ளார். இதனை அடுத்து பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையிலான பல்வேறு ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் மனுதாரரின் இந்த கோரிக்கையில் சாத்தியம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.